யாழ்ப்பாணம், மானிப்பாயில் வீடு உடைத்து 30 லட்சம் ரூபா பெறுமதியான நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருடப்பட்ட நகைகளை விற்பனை செய்ய உதவிய குற்றச்சாட்டிலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 4 ஆம் கதி சண்டிலிப்பாய், தொட்டிலடியில் வீட்டிலிருந்தவர்கள் வெளியே சென்ற சமயம் வீடு உடைத்து நகைகள் திருடப்பட்டிருந்தன.
இந்தச் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
திருட்டு நடந்த இடத்துக்கு அருகில் உள்ள பாதுகாப்பு கமராப் பதிவுகள் ஆராயப்பட்டு, தெல்லிப்பழை வீமன்காமத்தைச் சேர்ந்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் திருட்டு நகைகளை விற்க உதவிய கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர்களிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post