ஆபத்தான தீக்காயங்களுடன் இளம் குடும்பத் தலைவர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் மீது பெற்றோல் ஊற்றித் தீவைத்து ஆபத்தான தீக்காயங்களை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் குடும்பஸ்தரின் மனைவி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த நான்காம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புறநகர் பகுதியில் நடந்துள்ளது.
குடும்பத் தலைவர் மீது பெற்றோல் ஊற்றப்பட்டு தீவைக்கப்பட்டதால் ஆபத்தான வகையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார், படுகாயங்களுக்கு உள்ளாகிய குடும்பத்தலைவரின் மனைவியை கைது செய்து நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினார்.
சந்தேக நபரின் கணவன் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சந்தேக நபரே கணவன் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது” என்று பொலிஸார் சமர்ப்பணம் செய்தனர்.
சந்தேக நபரின் வீட்டுக்குள் பாம்பு ஒன்று வந்துள்ளது. அதை விரட்ட சந்தேக நபர் பெற்றோலை விசிறியுள்ளார். அது அங்கு ஏற்றப்பட்டிருந்த சாம்பிராணி குச்சியில் பட்டு தீ ஏற்பட்டுள்ளது.
கணவன் மீது பெற்றோலை ஊற்றும் எண்ணம் சந்தேக நபரிடம் இல்லை என்று சந்தேக நபரின் சட்டத்தரணி சமர்ப்பணம் செய்தார்.
இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, சந்தேக நபரான பெண்ணை எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
Discussion about this post