கோப்பாய் பகுதியில் அதிகாலை வேளையில் தொடர் வழிப்பறிக் கொள்ளைகள் நடைபெறுகின்றன என்றும், இலங்கை போக்குவரத்துச் சபையின் ஊழியர்கள் பலர் இந்த வழிப்பறிக் கொள்ளையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மட்டும் 7 பேரிடம் பணம் மற்றும் கைபேசி என்பன கத்திமுனையில் அச்சுறுத்திக் கொள்ளையிடப்பட்டுள்ளன. கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் செய்யப்பட்டபோதும், கோப்பாய் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை எனப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் இலங்கை போக்குவரத்துச் சபையின் 6 ஊழியர்கள் மற்றும் பத்திரிகை விநியோகம் செய்பவர் என 7 பேரிடம் 70 ஆயிரம் ரூபாவுக்கும் மேற்பட்ட பணமும், பல லட்சம் ரூபா பெறுமதியான கைபேசிகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன.
கோப்பாய் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைக்கு முன்பாகவே இந்தக் கொள்ளைகள் நடந்துள்ளன.
முகங்களை மறைக்கும் “மங்கி” குல்லா அணிந்த நால்வரே கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். வீதியால் பயணிப்போரை மறித்து பொலிஸார் என்று அறிமுகப்படுத்தும் கொள்ளையர்கள், அடையாள அட்டையைக் கேட்டு அச்சுறுத்தியுள்ளனர்.
திடீரென கத்தியைக் கழுத்தில் வைத்து அச்சுறுத்தி வழிப்பறியில் ஈடுபடுகின்றனர் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
பருத்தித்துறையில் இருந்து கோண்டாவில் சாலைக்குப் பயணித்த இருவரிடம் இருந்தும் 30 ஆயிரம் ரூபாவும், பெறுமதியான கைபேசிகளும் கத்திமுனையில் கொள்ளையிடப்பட்டுள்ளன.
அண்மைய நாள்களாக அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக வழிப்பறிக் கொள்ளை நடைபெறும் நிலையில், கோப்பாய் பொலிஸார் இது தொடர்பில் அசமந்தமாகச் செயற்படுகின்றனர் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
Discussion about this post