மிக அத்தியாவசியமான 91 மருந்துப் பொருள்களின் கையிருப்பு முற்றாகத் தீர்ந்துபோகும் ஆபத்து உருவாகியுள்ளது என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
நாட்டின் மத்திய மருத்துவக் களஞ்சியத்தில் கடந்த வாரம் இந்த நிலைமை அவதானிக்கப்பட்டது என்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இது தொடர்பில் தெரிவித்தபோது, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட குழுவின் அறிக்கை மூலம் இது தெரிய வந்துள்ளது என்றார்.
மயக்க மருந்து, புற்றுநோய் மருந்துகள், சுவாசப் பாதிப்புகள் நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் பொதுவான இருதய நோய்களுக்கான மருந்துகள், வலி நிவாரணிகள் என்பக முற்றாக தீர்ந்துபோகும் நிலை உருவாகியிருக்கின்றது.
இந்த நிலைமை உருவாகும்வரை இது தொடர்பாக பொறுப்பான அதிகாரிகள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது அறிக்கை ஊடாகத் தெரியவந்துள்ளது.
மீதமுள்ள மருந்துகளின் கையிருப்பு போதுமானதாக இல்லை. அதனால் நோயாளர்களுக்கு ஒரு மாதத்துக்கு போதுமான மருந்துகளை மருத்துவர்களால் வழங்க முடியவில்லை.
ஒரு வாரத்துக்கான மருந்துகளையே வழங்குகின்றனர். இந்த நிலைமையால் நோயாளிகள் மீண்டும் மருத்துவர்களை நாடவேண்டியுள்ளது என்று அவர் கூறினார்.
Discussion about this post