அனைத்து வகையான எரிபொருள்களும் 400 ரூபா முதல் 500 ரூபா வரை அதிகரிக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான அசோக் அபேசிங்க எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க, இலங்கையில் இன்னும் ஒரு மாதத்துக்கான எரிபொருள் இருப்பே இருக்கும் என்றும், அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
டொலரின் மதிப்பு 400 ரூபாவைத் தாண்டும் என்று கூறிய அபேசிங்க, ஒரு இறாத்தல் பாண் 250 ரூபா வரையில் உயரும் என்றும், மக்கள் மூன்று வேளை உணவு உட்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் என்றும் கூறினார்.
இலங்கையில் தோல்வியடைந்த அரசாங்கமும், ஜனாதிபதியும் இருக்கும்போது சர்வதேச நிறுவனங்கள் நிதியளிக்கத் தயங்கும் என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினர், சில இலக்குகளை அடைய ஏனைய கட்சிகளின் ஆதரவும் தேவைப்படும் என்றார்.
இன்னும் ஆறு மாதங்களுக்கு சமையல் எரிவாயு பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்று கூறிய அபேசிங்க, மூன்று மில்லியன் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறை உள்ளது என்றும், நாளாந்தம் எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டால் மட்டுமே இந்த நெருக்கடி தீரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post