இலங்கையை சேர்ந்த 22 வயதான இளம்பெண் சென்னையில் நடந்த விபத்தில் உயிரிழந்த நிலையில் அவர் சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் ஷோபனா (22) கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது தம்பி ஹரிஷ் (17) தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இலங்கையைச் சேர்ந்த இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் வசித்து வருகின்றனர்.
ஷோபனாவின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், வீட்டிற்கான அனைத்து பணிகளையும் ஷோபனா செய்து வந்துள்ளார். தினமும் தன் தம்பியை பள்ளியில் விட்டு விட்டு, வேலைக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் காலை தன் இருசக்கர வாகனத்தில் தம்பியை ஷோபனா பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.
சம்பவ இடத்திலேயே மரணம்
தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை மதுரவாயில் அருகே சென்ற போது, எதிரே வந்த வேன், இருசக்கர வாகன கைப்பிடி மீது உரசியதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.
இதில், பின்னால் மணல் ஏற்றி வந்த லொறி ஏறி இறங்கியதில், ஷோபனா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த பகுதியின் சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை
இதுகுறித்து விசாரித்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பொலிசார், விபத்து ஏற்படுத்திய வேன் மற்றும் லொறி ஓட்டுனர்கள் மோகன், பார்த்திபன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து ஷோபனாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது தந்தை வெளிநாட்டில் இருந்து வந்து கொண்டிருப்பதால் இறுதி சடங்குகள் இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post