கிரிபத்கொட நகரிலுள்ள வங்கியொன்றிலிருந்து 27 லட்சம் ரூபாவை எடுத்துக்கொண்டு சென்றவரை , மோட்டார் சைக்கிள் ஒன்றில் வழிமறித்து பணத்தைப் பறித்துச் சென்ற கொள்ளையனை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிரிபத்கொட லும்பினி மாவத்தையில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைத்து விசாரணை செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சந்தேகநபர் நீர்கொழும்பு தங்கொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான நபரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 18ஆம் திகதி மாலை 3.00 மணியளவில் அந்த வங்கியின் பின்னாலுள்ள வாகன தரிப்பிடத்திற்கு வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு தமது வாகனத்தை நோக்கி சென்றபோது இந்தக் கொள்ளை இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர் போதைவஸ்துக்கு அடிமையானவர் என்றும் கைது செய்யப்பட்ட போது 5 கிராம் 300 மில்லி கிராம் போதைவஸ்து இந்த நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அந்தப் பிரதேச புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலை அடுத்து அதற்கண்மையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்து சந்தேகநபரை கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நபர் சொகுசு வாகனம் ஒன்றில் ஆலயங்களுக்குச் சென்று இக்கொள்ளை தொடர்பாக பொலிசாருக்கு தம்மைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் என பூஜைகளை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதற்கென அவர் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபா வரை செலவிட்டு உள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போது கொள்ளையடித்த பணத்தில் கொள்வனவு செய்த மோட்டார் சைக்கிளொ ன்றும் எஞ்சிய பணமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post