யாழ்ப்பாணத்தில் செய்தி சேகரிப்புக்குச் சென்ற ஊடகவியலாளர்களுடன் கடுமையாக நடந்து கொண்ட பொலிஸார், கைது செய்வோம் என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.
கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்துக்கு ஊடகவியலாளர்கள் சென்றபோது, அங்கு வந்த பொலிஸார் ஊடகவியலாளர்களுடன் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர்.
செய்தி சேகரிப்புக்காகவே வந்துள்ளோம் என்று ஊடகவியலாளர்கள் தெரிவித்து அடையாள அட்டைகளைக் காண்பித்தபோதும், தற்போது நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், யாராக இருந்தாலும் கைது செய்வோம் என்று பொலிஸார் தெரிவித்தனர் என்று கூறப்படுகின்றது.
அந்த இடத்துக்கு வந்த யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர், உடனடியாக அந்த இடத்தில் இருந்து அகலாது விட்டால் கைது செய்வேன் என்று ஊடகவியலாளர்களுடன் கடும் தொனியில் வாக்குவாதப்பட்டுள்ளார்.
ஊடகவியலாளர்களின் பெயர் விவரங்கள், அடையாள அட்டை இலக்கங்களும் பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டன.
அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுடனும் பொலிஸார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அந்தப் பகுதியில் பெரும் எண்ணிக்கையான பொலிஸாரையும் குவித்தனர்.
Discussion about this post