களுத்துறையில் நடைபெற்ற மொட்டு கட்சியின் கூட்டத்தால் ஆளுங்கட்சியின் பிரதான பங்காளிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையே கடும் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
‘ஒன்றாக மீண்டெழுவோம், களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்’ எனும் தொனிப்பொருளில் மொட்டு கட்சியின் கூட்டமொன்று களுத்துறையில் உள்ள ரோஹித அபேகுணவர்தனவின் அலுவலகத்தில், மஹிந்த ராஜபக்ச தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது தங்கள் வழிக்கு வந்துவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.
மஹிந்தவின் இந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு, “ரணில் விக்கிரமசிங்க மொட்டு கட்சியில் இணைந்துவிட்டார், ராஜபக்சக்களின் சொல்படியே நடக்கின்றார், கட்சியை அடகுவைத்துவிட்டார்” என்றெல்லாம் விமர்சனக் கணைகள் தொடுக்கப்பட்டன. இதனால் ஐக்கிய தேசியக் கட்சி கடுப்பாகியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த ஐ.தே.க. பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார, “மக்கள் எழுச்சியால் சிலர் வெளியில் தலைகாட்ட முடியாமல் (மொட்டு கட்சியினர்) இருந்தனர். ஜனாதிபதி ரணிலின் கருணையால்தான் கூட்டம் நடத்தக்கூடியதாக உள்ளது. ராஜபக்சக்களை காப்பது ரணிலின் பணி அல்ல.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, பாலித ரங்கே பண்டாரவுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் மொட்டு கட்சி எம்.பியான சஞ்சீவ எதிரிமான்ன கருத்து வெளியிட்டார்.
“பிரதான இரு கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள அரசியல் நல்லிணக்கத்தை குழப்பும் விதத்தில் பாலிய ரங்கே பண்டார கருத்து வெளியிட்டுள்ளார். கொள்கை ரீதியிலான இணக்கப்பாடு தொடர்பாகவே மஹிந்த ராஜபக்ச உரையாற்றிருந்தார். மாறாக ஐ.தே.கவினதும், மொட்டு கட்சியினதும் யாப்பு என்பது ஒன்றல்ல.” என்று அவர் கூறியுள்ளார்.
Discussion about this post