கேகாலை, ரம்புக்கனயில் போராட்டம் நடத்திய மக்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் கேகாலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவருகின்றது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தைப் பதவி விலகக் கோரி மக்கள் இன்று நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். எரிபொருள் மற்றும் கோதுமை மாவின் விலையேற்றங்களும், அதைத் தொடர்ந்து பல பொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதும் மக்களைக் கொதிப்படைய வைத்துள்ளன.
ரம்புக்கனயில் ரயில் தண்டவாளத்தை மறித்து இன்று காலை முதல் மக்கள் போராட்டம் நடத்தினர். அதனால் ரயில் போக்குவரத்துத் தடைப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுப் பிரயோகம் மேற்கொண்டதை அடுத்து அங்கு நிலைமை கட்டுமீறியது. அதைத் தொடர்ந்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
Discussion about this post