முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை மலினப்படுத்தும் வகையில் தற்போதைய அரசாங்கம் செயற்படுகின்றது என்று முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முறையற்ற வகையில் பயன்படுத்துகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பாக சமர்ப்பிக்க்பட்ட அறிக்கையை முழுமையாகச் செயற்படுத்த வேண்டும்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கி, தேசிய பாதுகாப்பு நிமித்தம் நடைமுறைக்குப் பொருத்தமான சட்டம் உருவாக்கப்படும்வரை பயங்கரவாதத் தடைச்சட்டம் எதற்காகவும் பயன்படுத்தப்பட மாட்டாது என்று சர்வதேசத்துக்கு உறுதிமொழி வழங்கப்பட்டது. அதை தற்போதைய அரசாங்கம் மலினப்படுத்துகின்றது.
நாட்டில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் மதிக்கப்பட்டால் மாத்திரமே பொருளாதார மீட்சிக்காக சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை ஜனாதிபதி உட்பட அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் 6 உயர்மட்ட கண்காணிப்பாளர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்கள்.
தற்போதைய மனித உரிமைகள் மீறல் செயற்பாடுகள் மற்றும் ஜனநாயகத்துக்கு எதிரான அடக்குமுறைகள் மத்திய வங்கி ஆளுநரின் பொருளாதார மீட்சிக்கான முயற்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Discussion about this post