கொழும்பில் இன்று கூடிய மஹிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள், அலரி மாளிகைக்கு அருகிலும், காலி முகத் திடலிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதை அடுத்து கொழும்பு தற்போது பற்றியெரிகின்றது.
மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் மைனா கேகோ கம போராட்டத்தளத்தில் இருந்த கொட்டகையைப் பிடுங்கி எரிந்து வன்முறையை ஆரம்பித்து வைத்தனர். அதன்பின்னர் காலி முகத் திடலுக்குச் சென்று கோட்டா கோ கமவில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகளை பிடுங்கி எறிந்ததுடன், அங்கிருந்த மக்கள் மீதும் கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர்.
காலிமுகத் திடல் கலவர பூமியாகியதை அடுத்து, அங்கு நிலைமைகளை ஆராயச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீதும் ஒரு குழு கொட்டன்கள், தண்ணீர் போத்தல்கள் கொண்டு தாக்குதல் நடத்தியது. அதையடுத்து அவர் அங்கிருந்து அவசரமாக பாதுகாப்புப் பிரிவினரால் அகற்றப்பட்டார்.
இந்தச் சம்பவங்களை அறிந்த மக்கள் காலி முகத் திடலில் கூடத் தொடங்கியதை அடுத்து அங்கு பெரும் வன்முறை வெடித்தது. மஹிந்த ஆதரவாளர்கள் துரத்திப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டனர். மஹிந்த ஆதரவாளர்கள் பிடிக்கப்பட்டு கட்டி வைக்கப்பட்டுத் தாக்கப்பட்டனர்.
கொழும்புக்கு மஹிந்த ஆதரவாளர்களை ஏற்றிவந்த பஸ்கள் மக்களால் அடித்து நொருக்கப்பட்டதுடன், ஒரு சில பஸ்கள் தீ வைக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு வாகனங்கள் அங்குள்ள போற வாவிக்குள் கவிழ்க்கப்பட்டன.
தற்போதும் கொழும்பில் பல இடங்களில் வன்முறைகள் வெடித்துள்ளன. மக்கள் பல இடங்களில் வீதிக்கு இறங்கி அரசாங்கத் தரப்பினர் மீது தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். வீதிகளில் கூடியுள்ள மக்கள் பஸ்களை மறித்து அதில் பயணம் செய்வோரை விசாரித்து வருகின்றனர்.
Discussion about this post