அண்மையில் பிரான்ஸில் இருந்து வந்த 20 வயது இளைஞர் ஒருவர் அச்சுவேலியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி ஒருவருடன் தலைமறைவான சம்பவம் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது பிரான்ஸில் இருந்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சிறுமி மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நெதர்லாந்திலுள்ள 53 வயது நபரொருவரைத் திருமணம் செய்ய வேண்டும் என்று பெற்றோர் வற்புறுத்தினர் என்றும், தன்னை நிர்வாணமாக கைபேசியில் உரையாட நிர்ப்பந்தித்தனர் என்றும் அந்தச் சிறுமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார் என்று வைத்தியசாலைத் தரப்புக்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
அதையடுத்து சிறுமியின் பெற்றோரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமி பெற்றோர் தன்னை நிர்வாணமாக கைபேசியில் உரையாட நிர்ப்பந்திக்கவில்லை என்று கூறியுள்ளார். அதையடுத்து சிறுமியைத் தாக்கிய குற்றச்சாட்டில் தந்தையும், தாயும் அச்சுவேலிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸில் இருந்து வந்த இளைஞன் யாழ்ப்பாணம் கல்வியங்காட்டைச் சேர்ந்தவர் என்பதும், சிறுமியின் உறவினர் என்பதும் தெரியவந்துள்ளது. சிறுமியும், இந்த இளைஞனும் இரகசியமாகத் தொடர்ச்சியாக கைபேசியில் உரையாடியமைக்காகவே சிறுமியை தாக்கியதாகப் பெற்றோர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள பெற்றோர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள் என்று அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post