ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுக் குறிப்பிட்ட காலம் கடந்துள்ளபோதும், நாட்டைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கான திட்டங்கள் இன்னமும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதியின் கொள்கை உரையில் ஒரு வரையறையையும் கொள்கைகளையும் முன்வைத்திருந்தாலும் என்ன செய்ய வேண்டும்?, யார் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக இதுவரை எவருக்கும் தெளிவுபடுத்தப்படவில்லை.
அதனால், கடன் பொறியில் இருந்து மீள பொருளாதரத்தை மீட்டெடுக்க இடைக்கால நிரந்தர அபிவிருத்திக்கான திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.
பொருளாதாரத்தை குறுகிய காலத்துக்கு கட்டியெழுப்புவதற்கு எதிர்க்கட்சி 10 விடயங்கள் அடங்கிய பொது வேலைத்திட்டத்தை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைப்பு ரீதியான மாற்றத்தை எதிர்பார்த்த போதும், அப்படியான எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
ராஜபக்சவினரின் ஆவிகள் ஊடாக அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்வதை காணக்கூடியதாக இருக்கின்றது.
அதேவேளை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு முதல் முறையாக நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவியை வழங்கியமை தொடர்பாக மகிழ்ச்சியடைக்கின்றேன்.
அதன் ஊடாக தேவையான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த நான் நடவடிக்கை எடுப்பேன். நாட்டை கட்டியெழுப்ப அமைச்சராக வேண்டும் என்ற தேவையில்லை என்பதை இந்த பதவியின் மூலம் நிரூபித்துக் காட்ட எதிர்பார்த்துள்ளேன்.
தற்போதைய நாடாளுமன்றம் உண்மையாக மக்களின் ஆணையைப் பிரதிபலிக்கவில்லை. உண்மையான மக்களின் ஆணையைப் பிரதிபலிக்கும் நாடாளுமன்றம் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின்னர் தெரிவு செய்யப்படும்வரை இந்தப் பங்களிப்பை வழங்குவேன் என்றார்.
Discussion about this post