தெற்கில் நேற்றும் அதிகளவான வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் அல்லது பொதுச் சொத்துக்களைக் கொள்ளையிடும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முப்படையினருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நபர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவோர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சிறிது நேரத்தில் நாட்டின் பல இடங்களில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகின.
முல்லேரியாவில் நேற்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார். அங்கொட சந்தியில் முல்லேரியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஜீப்பைத் தாக்கியதுடன், அங்கிருந்த பஸ் ஒன்றைத் தீயிட முயன்ற குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று பொலிஸ் தரப்பு தெரிவித்தது.
ரத்கமவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். ரத்கம பிரதேச சபைத் தலைவர் வீட்டுக்கு அருகில் எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்துள்ளது.
அரசாங்கத்துக்கு எதிராக மக்களால் முன்னெடுக்கப்பட்ட அமைதியான போராட்டத்தில், அரச ஆதரவுடன் நடத்தப்பட்ட வன்முறையை அடுத்து நாட்டின் பல இடங்களில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரேதேச அரசியல்வாதிகளின் வீடுகள், சொத்துக்கள் பொதுமக்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
சில இடங்களில் அரச ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல்களும் ஏற்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தீவிரம் பெற்றுள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சால் நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post