வைத்தியசாலைக்கு சுகவீனமடைந்திருந்த மகளை அழைத்து வந்த தாயார், மகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதும் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றார். அவரை விரட்டிப் பிடித்த வைத்தியசாலை ஊழியர்கள், அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கும் தொற்று உறுதியானது.
இந்த சம்பவம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்றது.
எழுதுமட்டுவாளை சேர்ந்த பெண்ணொருவர் தனது 25 வயதான மகளை வைத்தியசாலைக்கு அழைத்து வந்திருந்தார். காய்ச்சல், உடல் சோர்வுடன் வந்த யுவதிக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து, தாயாருக்கும் அன்டிஜன் சோதனை மேற்கொள்ள தயாரான வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், தாயாரை பதிவு செய்து விட்டு வருமாறு கூறியுள்ளனர்.
பதிவு செய்யும் சாக்கில் அங்கிருந்து அகன்ற தாயார் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி தப்பிச் செல்ல முன்றார். அவர் நிற்குமாறு கூறியபோதும், விறுவிறுவென அங்கிருந்து நகர்ந்தார்.
அவரை விரட்டிச் சென்ற வைத்தியசாலை சிற்றூழியர்கள், வைத்தியசாலையின் முன்பாக- பிரதான வீதியில் வைத்து வழிமறித்து, பரிசோதனைக்கு அழைத்து வந்தனர்.
அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.
Discussion about this post