Sea Of Sri Lanka எனப்படும் இலங்கை கடலின் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் பிரவேசித்த இந்திய மீனவர்களை கைது செய்ய சென்ற படகு விபத்திற்குள்ளானதில் கடற்படை உறுப்பினரொருவர் உயிரிழந்துள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர், கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறை கடற்பரப்பிற்குள் பிரவேசித்து மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களை கைது செய்ய சென்ற போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
கடற்படை படகில் இருந்து இந்திய மீனவர்களின் படகிற்குள் பிரவேசிப்பதற்கு முயற்சித்தபோது இந்திய மீன்பிடிப் படகு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செலுத்தப்பட்டதால் ஏற்பட்ட விபத்திலேயே குறித்த கடற்படை உறுப்பினர் உயிரிழந்ததாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குருணாகல் – இப்பாகமுவயை சேர்ந்த 40 வயதான விசேட படகுகள் அணியின் உறுப்பினரொருவரே உயிரிழந்ததாக அவர் கூறினார்.
உயிரிழந்த கடற்படை உறுப்பினரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை கடற்பரப்பில் கடற்படையினர் முன்னெடுத்த இந்த சுற்றிவளைப்பின் போது 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் பயணித்த படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
நாகைப்பட்டினம் மாவட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்திய மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த மீன்பிடி தடைக்காலம் கடந்த 14ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் ஒரு வாரத்திற்குள் Sea Of Sri Lanka கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த 36 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் ஐந்து படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
இந்த நிலையில் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் 2018ஆம் ஆண்டு முதல் கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க கோரி இந்தியாவின் இராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று(24) காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் Sea Of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த 214 இந்திய மீனவர்கள் 28 படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.
Discussion about this post