சீனாவுக்கும் (China) இந்தியாவுக்கும் (India) இடையிலான வர்த்தக போட்டித்தன்மையே இலங்கையின் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என தேசிய மக்கள் சக்தியின் (JVP) நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
நாடாமன்றில் நேற்று (07) இடம்பெற்ற அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ”பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அரச நிதி முகாமைத்துவ சட்டமூலத்தை முன்வைத்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.
சர்வதேச நாணய நிதியம்
சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தின் போது தேசிய கடன்களை மறுசீரமைக்கப் போவதில்லை என்று குறிப்பிடப்பட்டது. ஆனால் தேசிய கடன்கள் தான் முதலாவதாக மறுசீரமைக்கப்பட்டது.
வெளிநாட்டு அரசமுறை கடன்களை இன்று மறுசீரமைப்பதாகவும், நாளை மறுசீரமைப்பதாகவும், அடுத்த மாதம் மறுசீரமைப்பதாகவும் அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் ஒரு டொலர் கடன் கூட இதுவரை மறுசீரமைக்கப்படவில்லை. இதுதான் உண்மை.
இலங்கையின் மொத்த கடன் பெறுமதி 100 பில்லியன் டொலர் என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு விட்டோம், பணவீக்கம் குறைவடைந்து விட்டது என்று அரசாங்கம் பெருமை கொள்கிறது. ஆனால் கடன் நிலைமை பற்றி எதுவும் குறிப்பிடுவதில்லை.
100 பில்லியன் டொலர்
2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மாத்திரம் அரசாங்கம் 4 பில்லியன் டொலர் தேசிய கடன்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. இவ்வாறான நிலையில் அரசமுறை கடன் 100 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது.
இலங்கையின் பிரதான இரு தரப்பு கடன் வழங்குநர்களாக இந்தியா, சீனா ஆகிய நாடுகள் காணப்படுகின்றன. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக போட்டித்தன்மையினால் இலங்கையின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது.
சர்வதேச கடன் மறுசீரமைப்புக்கு இவ்விரு நாடுகளும் சாதகமான தீர்மானத்துக்கு வரவில்லை.“ என தெரிவித்தார்.
Discussion about this post