அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படுவதாக இருந்த, வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10,000 ரூபாவிலிருந்து 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குனவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட முன்மொழிவின் மூலம் அரச ஊழியர்களில் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் 10000 ரூபாவினால் அதிகரிப்பதற்கும், குறித்த கொடுப்பனவு 2024 ஏப்ரல் மாதத்திலிருந்து வழங்குவதற்கும் அரசு திட்டமிட்டிருந்தது.
நிலவுகின்ற நெருக்கடியான பொருளாதார நிலைமையால் குறித்த கொடுப்பனவின் பகுதியளவை ஆண்டின் ஆரம்ப மாதங்களில் வழங்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.
அதற்கமைய, நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நிலைமையால் ஏற்பட்டுள்ள அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு அனைத்து அரச ஊழியர்களுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் அதிகரிக்கப்படுகின்ற வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவின் 50 வீதம், அதாவது 5,000 ரூபாவினை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதேவேளை, மருத்துவர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு வழங்கும் ஒருசில கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த விடயத்தை ஊடக பேச்சாளர் என்ற ரீதியில் பந்துல குனவர்தன நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
Discussion about this post