கனேடிய மண்ணில் கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா குற்றம் சாட்டியுள்ளது தொடர்பாக இந்திய உயர் ஸ்தானிகரிடம் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது.
கனடாவில் சீக்கிய பிரிவினைவாத அமைப்பு ஒன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார்.
கனடாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகரான சஞ்சய் குமார் வர்மா கனேடிய தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தபோது, கனடாவில் கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விடயத்தில், உண்மையில் இந்தியாவுக்கு எந்த பங்கும் இல்லையென்றால், உங்கள் அரசாங்கம் ஏன் விசாரணையில் ஒத்துழைக்க மறுக்கிறது என்று கேள்வி எழுப்பினார் ஊடகவியலாளர் ஒருவர்.
அந்த ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த கனடாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகரான சஞ்சய் குமார் வர்மா, இதில் இரண்டு வியங்கள் உள்ளன, ஒன்று, விசாரணைமுடியும் முன்பே இந்தியா குற்றவாளி என முடிவு செய்யப்பட்டுவிட்டது என்று கூறியதுடன், அது சட்டத்தின் ஆட்சியா என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்தியா குற்றவாளி என முடிவு செய்யப்பட்டுவிட்டது என்று எப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டார் ஊடகவியலாளர். அதற்கு பதிலளித்த வர்மா, ஏனென்றால், இந்தியா ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது, குற்றவியல் பதங்களின்படி, ஒத்துழைப்பு அளிக்கும்படி ஒருவர் கேட்டுக்கொள்ளப்படுகிறார் என்றால், அவர் ஏற்கனவே குற்றவாளி என முடிவு செய்யப்பட்டுவிட்டார் என்றும், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டும் என்றும் பொருள் என சுடச்சுட பதிலளித்தார்.
அதை நாங்கள் வேறு விதமாக அர்த்தப்படுத்திக்கொண்டோம் என்று வைத்துக்கொண்டாலும், கனடாவிடம் ஏதாவது குறிப்பிடத்தக்க மற்றும் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஆதாரம் இருக்குமானால், அதை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறும், நாங்கள் அது குறித்து விசாரிக்கிறோம் என்றும் எப்போதுமே கூறிவருகிறோம் என்றும் கூறினார் வர்மா.
Discussion about this post