கனடா அனுப்புவதாகக் கூறி வவுனியாவில் பண மோசடி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வவுனியாவின் பட்டக்காடு, திருநாவற்குளம், தவசிகுளம், மல்லாவி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 நபர்களிடம் கனடா அனுப்புவதாகக் கூறி யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பணம் பெற்றிருந்தார்.
ஒருவரிடம் இருந்து 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் 6 பேரிடம் பணம் பெற்றிருந்ததுடன், பிறிதொருவரிடம் 3 பவுண் சங்கிலி ஒன்றையும் பெற்றுள்ளார்.
எனினும் கனடா அனுப்பாது மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட நபர்கள் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர் ஒருவரை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரை வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Discussion about this post