பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்து தொழிலதிபர் ஒருவரின் மூன்று மகள்கள் முஸ்லிம் ஆண்களுடன் திருமணம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து பெண்கள் மூவரும் முதலில் கடத்திச் செல்லப்பட்டு வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்றியதாக நாட்டின் முன்னணி சிறுபான்மை உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து Pakistan Darewar Itehad அமைப்பின் தலைவர் சிவ கச்சி கூறுகையில்,
சிந்துவின் தர்கி பகுதியில் இந்து தொழிலதிபர் லீலா ராமின் மகள்கள் சாந்தினி, ரோஷ்னி மற்றும் பரமேஷ் குமாரி ஆகியோர் முதலில் கடத்தப்பட்டு பின்னர் வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
பின்னர் அவர்கள் முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்து கொண்டனர்” என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும், பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்காமையின் காரணமாக இந்து சிறுமிகளை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்வது தொடர்பான பிரச்சனை தடையின்றி தொடர்கிறது என்றார்.
மூன்று சகோதரிகளும் அவர்களை கடத்திய ஆண்களையே திருமணம் செய்து கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீமா ஹைதர் சம்பவத்திற்குப் பிறகு நதிக்கரையோரப் பகுதிகளில் இந்து சமூகம் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும் கச்சி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த நான்கு குழந்தைகளின் தாயான சீமா ஹைதர், ஆன்லைன் கேம் மூலம் நட்பாகப் பழகிய சச்சின் மீனா என்ற இந்து இளைஞருடன் வாழ இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார்.
ஒரு பழமைவாத முஸ்லிம் நாட்டின் சமூக விதிமுறைகளை மீறத் துணிந்ததற்காக அந்த பெண் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் இந்துக்களுக்கு பதிலடி கொடுக்க தினமும் மிரட்டல் விடுக்கப்படுகிறது என்று கச்சி கூறினார்.
கடந்த வாரம், சிந்து மாகாணத்தின் காஷ்மோர் பகுதியில் உள்ள இந்துக்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் இந்து கோவில் மீது ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
“காஷ்மோரில் பக்ரியின் கோவில் தாக்கப்பட்ட பிறகு, அதிகாரிகள் இப்போது மிர்புர்காஸ், காஷ்மோர், தார்பார்கர், கோட்கி, சுக்கூர், உமர்கோட் மற்றும் சங்கர் ஆகிய இடங்களில் உள்ள கோவில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பிற்காக இந்து காவல்துறையினரை அனுப்பியுள்ளனர்” என்று கச்சி குற்றம் சாட்டினார்.
இந்த இந்துக் காவலர்களும் தாக்குதல்காரர்களை வேட்டையாடுவதற்காக சிந்து ஆற்றங்கரைப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “இவர்கள் சிந்துவின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த காவல்துறையில் குறைந்த பதவிகளில் பணியாற்றும் ஏழை இந்துக்கள் ஆவர்.
இப்போது அவர்கள் இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் விரும்புகிறார்கள்” என்று கச்சி மேலும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் இந்துக்கள் மிகப்பெரிய சிறுபான்மை சமூகமாக உள்ளனர். பாகிஸ்தானின் பெரும்பான்மையான இந்து மக்கள் சிந்து மாகாணத்தில் குடியேறியுள்ளனர்,
அங்கு அவர்கள் கலாச்சாரம், மரபுகள் மற்றும் மொழியை முஸ்லிம் குடியிருப்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post