ஊர்காவற்றுறைப் பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களாக வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸ்ஸில் தலைமையிலான பொலிஸ் குழுவே சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 60 பவுண் தங்க நகைகளும், ஒரு தொகைப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களாக காரைநகர், புங்குடுதீவு, ஊர்காவற்றுறை, வேலணை போன்ற பிரதேசங்களில் வீட்டில் யாருமில்லாத நேரம் பகல் வேளைகளில் வீடு உடைத்து நகைகள், பொருள்கள் தொடர்ச்சியாகத் திருடப்பட்டு வந்தன.
இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணைனைகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் கொட்டடியைச் சேர்ந்த 20 மற்றும் 22 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.
அதன்பின்னர் அவர்களிடம் இருந்து நகைகளைக் கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
வேலணை, அராலி வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து 20 பவுண் தங்க நகைகளும், வங்களாவடியில் உள்ள வீடொன்றில் இருந்து ஏழரைப் பவுண் தங்க நகைகளும், சுருவிலில் உள்ள வீடொன்றில் இருந்து 13 பவுண் நகைகளும், புங்குடுதீவில் உள்ள வீடொன்றில் இருந்து 3 பவுண் நகைகளும் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரம்ப விசாரணைகளில் முழங்காவில் மற்றும் காரைநகர் ஆகிய இடங்களில் உள்ள இரு வேறு வீடுகளில் 11 பவுண் நகைகளைத் திருடியமையை சந்தேகநபர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள். அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களால் 16 பிடியாணை உத்தரவுகள் வழங்க்பட்டுள்ளன.
Discussion about this post