சுதந்திர மக்கள் காங்கிரசின் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் ஒன்றிணைவார்கள் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளமை பொய்யானது.
ஆளும் தரப்பில் மிகுதியாகவுள்ள உறுப்பினர்களை பாதுகாக்க அவர் கவனம் செலுத்த வேண்டும்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் தந்திரம் பொதுஜன பெரமுனவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது-
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் சுதந்திர காங்சிரஸின் 13 உறுப்பினர்களில் பெரும்பாலானோர் பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் ஒன்றிணைய போவதாக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கைக்கும்,யாப்புக்கும் முரணாக செயற்பட்டதால் பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுகிறோம்.பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரின் தன்னிச்சையான செயற்பாடுகளும், வெறுக்கத்தக்க பேச்சுக்களும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை குறுகிய காலத்தில் பலவீனப்படுத்தியது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் வெகுவிரைவில் எம்முடன் ஒன்றிணைவார்கள்.நாட்டு மக்கள் மத்தியில் பொதுஜன பெரமுனவுக்கு இன்றும் நன்மதிப்பு உள்ளதென ஒரு தரப்பினர் குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது.தமது அரசியல் தேவைகளுக்காக மக்களின் உண்மை அபிலாசைகளை விளங்கிக்கொள்ள மறுக்கின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் தந்திரம் பொதுஜன பெரமுனவிற்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.ஆகவே மிகுதியாகவுள்ள உறுப்பினர்களை பாதுகாத்துக்கொள்ள சாகர காரியவசம் அவதானம் செலுத்த வேண்டும்.ஜனாதிபதிக்கும்,பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் இணக்கப்பாடு கிடையாது என்றார்.
Discussion about this post