ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்தாலும் சிறிலங்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் பெரியளவான மாற்றங்கள் இல்லை. இந்தநிலைமையில் அமெரிக்க சார்பு நாடுகள் இலங்கையைப் பாதுகாக்கும் என்பது சந்தேகமே என்று தெரிவித்துள்ளார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையை காரணம் காட்டி இன்னும் கால அவகாசம் தாருங்கள் என்று சிறிலங்கா அரசாங்கம் கோரவுள்ளது. பொறுப்புக் கூறலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான முயற்சிகளை எடுத்துள்ளது. ஆனால் சிறிலங்கா சர்வதேசத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று பல தரப்புக்கள் முயற்சிகளை எடுத்துள்ளன.
கோத்தாபய அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களில் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் அ னைத்தும் சிறிலங்காவுக்கு எதிராகத் திரும்பியுள்ளன. காத்திரமான ஒரு தீர்மானம் வரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது.
இந்தியா சிறிலங்கா அரசாங்கத்தால் பலமுறை ஏமாற்றப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குக் கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளை சிறிலங்கா காப்பாற்றியதாக வரலாறு இல்லை. அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை 99 வருடக் குத்தகைக்கு சிறிலங்கா சீனாவுக்குக் கொடுத்திருக்கின்றது. 99 ஆண்டுகளில் என்ன நடக்கும் என்பதற்கு முத்தாய்ப்பாகவே சீனாவின் உளவுக் கப்பல் வருகை இருக்கின்றது. இந்தியா அதை எதிர்த்தபோதும், வருகையை மறுக்க முடியவில்லை.
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக சீனாவுடன் பேசினால் உள்விவகாரத்துக்குத் தொடர்பில்லை என்ற பதிலே தரப்படுகின்றது. தமிழ் மக்கள் எக்கேடு கெட்டாலும், தங்கள் ஆளுமை என்பது இந்து சமுத்திரத்தில் இருக்க வேண்டும் என்ற சீனா விரும்புகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பை ரெலோ ஜெனிவா கூட்டத்தொடருக்குப் பின்னர் நடத்தியிருக்கலாம். ஜெனீவா மனித உரிமைகள் பேரவை தொடர்பாக நாங்கள் ஏற்கனவே கூட்டாக எடுத்த தீர்மானங்களில் இருந்து ரெலோ விலக மாட்டாது என்று நம்புகின்றேன்.- என்றார்.
Discussion about this post