இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி பேரிடர் நிலைமை இரண்டு ராஜபக்சக்களின் ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்களின் விளைவே. ராஜபக்சக்களை ஆட்சியில் இருந்து அகற்றிய மக்கள் போராட்டம் மெய்சிலிர்க்க வைத்தது.
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இலங்கை சந்தித்த மாற்றங்கள் தொடர்பாக இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எங்கள் அமைப்புமுறை வீழ்ச்சியடைந்துள்ள போது – வேண்டுமென்றே அழிக்கப்பட்டுள்ள போது – நீங்கள் எப்படி நிலைமையை மாற்றுவீர்கள்? சமூக அரசியல் எழுச்சியால் மாத்திரமே அதை மாற்றமுடியும் – புரட்சியே வழி.
இரண்டு ராஜபக்சக்களின் ஆட்சி காரணமாக நாடு அந்த நிலையை அடைந்திருந்தது. மோசமான வெறுக்கத்தக்க அனைத்தும் அதிகாரத்தில் ஸ்திரப்படுத்தப்பட்டிருந்தது. ராஜபக்ச குடும்பம் மற்றும் அவர்களது கூட்டாளிகளால்தான் நாம் இன்று வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டோம்.
நாடாளுமன்றத்தில் ராஜபக்சக்காளின் ஆதரவை நம்பியுள்ள ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க எவ்வாறு செயற்படுகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சமூக நலன்புரி மாதிரியுடன் தாராளவாத நிதியியலை கலக்கும் முறைக்கும் அதிகாரிகள் செல்லவேண்டும்.
சர்வதேச சமூகத்தை அடிப்படையாக கொண்ட கடினமான முடிவுகளை இலங்கை எடுக்கவேண்டிய நிலை காணப்படலா. வெளி உதவி தொடர்பான பேச்சுக்களின்போது இந்த நிலை காணப்படலாம்.
ராஜபக்ச அரசாங்கம் ஒரு நாட்டை நோக்கி அதிகமாக நகர்ந்தது. ஆனால் அணிசேரா மாதிரியை இலங்கை பின்பற்றவேண்டும். ராஜபக்ச அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் இந்தியா விலகியிருந்து காத்திருந்திருக்க கூடிய நிலை காணப்பட்டது. தற்போது இந்தியா எமக்கு உதவ முன்வந்தமை, உதவிகளை வழங்கியமை தொடர்பாக நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
ராஜபக்சக்கள் மீண்டும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் நிச்சயமாக உள்ளன. ரணிலால் தலைமை வகிக்கப்படும் அதிகாரிகளும், நம்பிக்கைக்குரிய அதிகாரிகளும் நாட்டின் தேசிய விவகாரங்களுக்குத் தீர்வை கண்டால் வரலாற்றின் கடந்த காலம் ராஜபக்சாக்களை உரிய இடத்தில் வைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post