இலங்கை மக்களின் அவசர சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் வழங்கப்படவுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கஜனாதிபதியாக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்து இந்த செய்தியை அவர் அனுப்பியுள்ளார்.
நாட்டுக்கு வழங்கப்படவுள்ள அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுக்கான கொள்வனவு நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விநியோகிப்பதற்கான திகதிகள் மற்றும் பெயர்கள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை அலுவலகத்தினால் அறிவிக்கப்படும் எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொவிட் -19 தொற்று காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார அழுத்தத்தை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொள்வதாகவும், உலகளாவிய உணவு மற்றும் எண்ணெய் விலை உயர்வு பாதிக்கப்படக்கூடிய சமூகத்திற்கு பெரும் சவாலாக இருப்பதாகவும், உலக சுகாதார அமைப்பு அந்த சவாலான காலகட்டத்தில் இலங்கைக்கு வசதிகளை வழங்க தயாராக உள்ளது.
இலங்கை மக்களின் அத்தியவசிய சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரகால நிகழ்ச்சித் திட்டத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும், அதற்கான மருத்துவப் பொருட்கள் இலங்கையின் ஒத்துழைப்புடன் விநியோகிக்கப்படும் எனவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைப்பின் செயல்திறன் மற்றும் மீள்தன்மை உட்பட மக்களுக்கு ஏற்படும் சுகாதார பாதிப்புகளை உலக சுகாதார அமைப்பு உன்னிப்பாக அவதானித்து, இலங்கையில் மாகாண சுகாதார சேவைகளை வலுப்படுத்த தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post