தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் ஒக்டோபர் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவிருப்பதால், கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்ஸை தாமதமின்றிப் பெறுமாறு சுகாதார நிபுணர்கள் இன்று பொது மக்களை வலியுறுத்தியுள்ளனர்.
அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சமித்த கினிகே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதுவரை, இலங்கையின் மொத்த சனத்தொகையில் 20 வயதுக்கும் மேற்பட்ட 14.4 மில்லியன் பேரில் 8 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பூஸ்டரைப் பெற்றுள்ளனர். 20 வயதுக்கு மேற்பட்ட சுமார் ஆறு மில்லியன் மக்கள் இன்னும் பூஸ்டர் டோஸ் பெற உள்ளனர்.
எனவே, தற்போது நாட்டில் ஏராளமான தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு சுகாதார அதிகாரிகள் நான்காவது டோஸ் பரிந்துரைத்துள்ளதாகவும், 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமாக இருந்தால் நான்காவது டோஸ்ஸை பெறலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post