சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இன்று நாட்டுக்கு வரவுள்ள நிலையில், கடன் மறுசீரமைப்பு திட்டம் இன்னமும் உருவாக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு கடன் வழங்குதல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகிய நோக்கங்களுக்காக சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் நாட்டுக்கு வருகின்றனர்.
ஆயினும் இதுவரை கடன் மறுசீரமைப்புத் தொடர்பான திட்டம் இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை. நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களுடன் கலந்துரையாடப்பட்டு வருகின்றது என்றும் இலங்கை மத்திய வங்கியின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வெகு விரைவில் இந்த திட்டத்தை உருவாக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடன் அதிகாரபூர்வமாக இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டால் மட்டுமே கடன் தருநர்களிடம் பேச முடியும் என மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க சர்வதேச ஊடகமொன்றுக்குத் தெரிவித்திருந்தார். எனினும் கடன் தருனர்களுடன் இதுவரையில் அதிகாரபூர்வமாக தொடர்பு கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக பெற்றுக் கொள்ளும் முனைப்புக்கள் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Discussion about this post