ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைககள் நிதியமைச்சால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உணவுப் பற்றாக்குறை மற்றும் வாழ்க்கைச் செலவுகளின் அடிப்படையில் நிதி அமைச்சு முந்தைய மொத்த செலவின மதிப்பீடான 3.6 டிரில்லியன் ரூபாவை திருத்த வரைபில் 4.6 டிரில்லியன் ரூபாவாக மாற்றியுள்ளது. அத்துடன் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் அனைத்து செலவுகள் மற்றும் வருவாய் மதிப்பீடுகள் மாற்றப்படவுள்ளன.
இதேவேளை அரசாங்க வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் 2019 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த வரிக் கட்டமைப்பு மீள அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று பொருளாதார நிலைப்படுத்தல் குழு தலைவரும், திறைசேரியின் முன்னாள் செயலாளருமான டொக்டர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க தெரிவித்துள்ளார்.
இடைக்கால வரவு – செலவுத் திட்டம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகத்துக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை ஒரு குறுகிய காலத்துக்குள் ஸ்திரப்படுத்தவும், மீட்டெடுக்கவும் அடித்தளம் அமைக்கும். அத்தியாவசிய பொதுச் சேவைகளுக்கு கணிசமான நிதி வசதிகளை ஒதுக்கும் வகையில் அமையும் என நிதி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post