சுகாதாரத் துறையினருக்கான எரிபொருள் விநியோகத்தைக் குழப்ப முனைவதால், வடக்கு மாகாணத்தின் சுகாதார சேவைகள் முடங்கும் நிலை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் மருத்துவர் சரவணபவன் தாக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண மருத்துவமனைகளின் சேவைகளை முற்றாக வடககு மக்கள் இழக்க நேரிடும் என்று சுட்டிக்காட்டியுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர், அதனால் காப்பாற்றக்கூடிய பல அப்பாவி உயிர்பகள் மட்டுமல்லாது, தற்போது குழப்பம் விளைப்போரின் உயிர்கள் கூடப் பறிபோகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
சுகாதார மருத்துவ அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், குடும்பல நல உத்தியோகத்தர்கள் உட்பட அனைத்துச் சுகாதாரப் பணியாளர்களும் கடமைக்கு வருவதைத் தவிர்த்து எரிபொருள் வரிசைகளில் காத்திருந்தால் அதனால் ஏற்படும் சுகாதார நெருக்கடி அளவிட முடியாதது என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
கிளிநொச்சி, மாவட்டத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விநியோகத்தை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ந.சரவணபவன், அங்கிருந்த ஒருவரால் தாக்கப்பட்டார்.
Discussion about this post