இந்தியாவிடமிருந்து கடன் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்டு வந்த எரிபொருளில், கடைசி எரிபொருள் தாங்கிய டீசல் கப்பல் இந்தமாதம் 16 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.
அதன்பின்னர் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் முறை தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளது என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர் எரிபொருள் உதவி பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கை இந்தியாவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதே நேரம், நாட்டில் எரிபொருள் நெருக்கடி நாளை முதல் மோசமடையலாம் என்று பெற்றோலிய தொழிற்சங்கங்கள் கருத்துக்களை முன் வைத்துள்ளன.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் புள்ளி விவரங்களின் படி இன்னும் நான்கு நாள்களுக்கு மட்டுமே நாட்டில் டீசல் கிடைக்கும் என பெற்றோலிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு முற்பணம் செலுத்த வேண்டும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது என்று பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முற்பணம் செலுத்தி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படுமோ என்பது இனிமேல்தான் தெரியவரும் என்று தெரிவித்துள்ள அந்தச் சங்கம், எதிர்வரும் புதன்கிழமைக்குப் பின்னர் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்கள் உருவாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
பெற்றோல், டீசல் பற்றாக்குறை சிக்கலின் காரணமாகவே இன்று 13ஆம் திகதி அரச நிறுவனங்கள், பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.
Discussion about this post