தன்னைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவைக் கைது செய்வதற்கான பிடியாணையை கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்றுப் பிறப்பித்தது.
சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் சமர்ப்பித்த கோரிக்கைக்கு அமையவே கோட்டை நீதிவான் நீதிமன்றம் இந்தப் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடந்த மாதம் 9ஆம் திகதி கொழும்பு, காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது மஹிந்த ராஜபக்சவின் ஆதரவுக் காடையர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
அதையடுத்து நாடு முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியதுடன், ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளும் தாக்கப்பட்டிருந்தன.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளில் சந்தேநபராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவர் வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகவில்லை. கடந்த ஒருவாரமாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடிவருகின்றதுபோதும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சட்டத்தரணிகளால் ரிட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ரிட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், நேற்று கொழும்பு கோட்டை நீதிமன்றம் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
Discussion about this post