யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட பகுதிகளில் நேற்றுமுன்தினம் நடந்த இருவேறு விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
திருநெல்வேலி , இராமலிங்கம் வீதியில் பூங்கனிச்சோலைக்கு அருகில் நேற்றுமுன்தினம் இரவு, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர்.
கோப்பாய், பூதர்மடத்தடியைச் சேர்ந்த மகேந்திரன் மகிந்தன் (வயது-25) , கச்சேரி கிழக்கை சேர்ந்த றொபின்சன் சார்ள்ஸ் (வயது-23) மற்றும் சபாபதிப்பிள்ளை வீதி , சுன்னாகத்தை சேர்ந்த யோகநாதன் மேர்வின் டேனுஜன் (வயது-17) ஆகிய மூவரே உயிரிழந்துள்ளனர்.
ஒரு மோட்டார் சைக்கிளில் இருவரும் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் மூவரும் பயணித்த வேளை பூங்கனிச்சோலைக்கு அருகில் இரு மோட்டார் சைக்கிளிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட நிலையில், அவர்களின் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். ஏனைய இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உரும்பிராய் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற இன்னொரு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கை சேர்ந்த துரைராசா மயூரன் (வயது-27) என்பவரே உயிரிழந்தவராவார்.
இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதி அருகே இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்துக்கள் தொடர்பாகக் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post