இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்த பின்னரே சிறந்த நிலைக்குத் திரும்பும். இலங்கை ஜனாதிபதியைப் பதவியில் இருந்து நீக்குவது ஒருபோதும் நடக்காது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமான பி.பி.சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களுக்கு மூன்றுவேளை உணவு கிடைப்பதை உறுதி செய்வதே எனது பிரதான இலக்கு என்று தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரசிங்க, உலகநாடுகள் இலங்கைக்கு மேலும் நிதியுதவி வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கையின் பொருளாதாரம் முறிந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிற்க, பொறுமையாக இருங்கள் நான் முன்னைய நிலைமையை ஏற்படுத்துவேன் என்பதே இலங்கை மக்களுக்கான எனது செய்தி என்றும் தெரிவித்துள்ளார்.
கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்களின் உணர்வுகளை ஏற்றுக்கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, ஆனால் அது நடக்காது என்றும், குற்றஞ்சாட்டுவது நடவடிக்கைகளுக்கு வழிவகுக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் மக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காலிமுகத் திடலில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களும் அதையே வலியுறுத்தி வருகின்றனர்.
Discussion about this post