இலங்கையில் நேற்று வெடித்த வன்முறைச் சம்பவங்களில் ஆளுங்கட்சி எம்.யொருவர் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். 300 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 30 இற்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
“மைனாகோகம’, ‘கோட்டாகோகம’ அறவழி போராட்டக்காரர்கள்மீது ஆளுங்கட்சியின் நேற்று முற்பகல் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் வெடித்தன.
அலரிமாளிகைக்கு வருகைதந்து, அதன் பிறகு போராட்டக்காரர்கள்மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்ட மொட்டு கட்சியின் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்க ஆதரவாளர்கள் உட்பட போராட்டக்காரர்கள்மீது, மக்கள் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். அவர்கள் பயணித்த வாகனங்களையும் சேதப்படுத்தினர்.
அதேவேளை, மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக இல்லமும் கொளுத்தப்பட்டது.
ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, ரமேஷ் பத்திரண, விமல் வீரவன்ச, பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, மொறட்டுவ மேயர், சனந் நிஷாந்த, கெஹலிய ரம்புக்வெல்ல, பிரசன்ன ரணவீர, துமிந்த திஸாநாயக்க, எஸ்.எம். சந்திரசேன, திஸ்ஸ குட்டியாராச்சி உட்பட 30 இற்கும் மேற்பட்ட அரசியல் பிரமுகர்களின் வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு சொந்தமான சில ஹோட்டல்களும் நொறுக்கப்பட்டுள்ளன.
வாகனங்களும் எரியூட்டப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன. அநுராதபுரத்தில் உள்ள மந்திரவாதியான ஞான அக்கா என்றழைக்கப்படும் ஞானவதியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான ஹோட்டலும் கொளுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமமீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார்.
ஊரடங்குக்கு மத்தியிலும் அலரிமாளிகைக்கு முன்பாக நேற்றிரவு பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. பொலிஸாரும், படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டக்காரர்கள் அலரிமாளிகைக்குள் நுழைவதற்கு முற்பட்டவேளை பதற்றம் ஏற்பட்டது. கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டது.
அதன்பின்னர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி, எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அலரிமாளிகை சம்பவத்தில் 200 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஒரு உயிரிழப்பு சம்பவமும் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களில் ஐவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.
கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் இன்று காலையே நிலைமை கட்டுக்குள் வந்தது. அதன்பின்னர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மஹிந்த ராஜபக்ச அலரிமாளிகையிலிருந்து வெளியேறினார்.
இதற்கிடையில் நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இராணுவத் தளபதி நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைதியை கடைபிடிக்குமாறு சர்வமத தலைவர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பல தரப்பினரும் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post