மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு நான் ஒருபோதும் கோரவில்லை. பதவி உட்பட ஏனைய எல்லா விடயங்களைவிடவும் எனக்கு எனது சகோதரர் முக்கியம் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்றிரவு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
அதில் இடைக்கால அரசு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இது சம்பந்தமான கருத்தாடலை இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவே ஆரம்பித்து வைத்தார்.
இடைக்கால அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்கு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் பதவிக்காக டலஸ் அழகப்பெரும சூழ்ச்சி செய்கின்றார் என டலஸ்மீது சரமாரியாக விமர்சனக் கணைகளையும் திஸ்ஸ குட்டியாராச்சி தொடுத்துள்ளார்.
அப்போது குறுக்கிட்ட பிரதமர் மஹிந்த, “டலஸ் அழகப்பெருமவை எனக்கு நன்கு தெரியும். நான்தான் அவரை அரசியலுக்கு கொண்டுவந்தேன். ஒளிந்திருந்து தாக்கும் – முதுகில் குத்தும் நபர் அவர் அல்லர் என்பது தெரியும்.” என்று டலசுக்காக பரிந்து பேசியுள்ளார்.
இடைக்கால அரசு தொடர்பாக ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கிடையே நேற்று காரசாரமான வாக்குவாதமும் இடம்பெற்றுள்ளது. பிரதமரே நிலைமையை சமரசப்படுத்தியுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
இறுதியில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, “பிரதமரை பதவி விலகுமாறு நான் ஒருபோதும் கோரவில்லை. எல்லாவற்றைவிடவும் எனக்கு எனது சகோதரர் முக்கியம். நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை இருந்தால் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. அவ்வாறு இல்லாவிட்டால் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு பிரதமர் பதவியை வழங்க வேண்டிய நிலைமை எனக்கு ஏற்படும்.” – என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை பலம் இருக்கின்றது என்று இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Discussion about this post