கொழும்பில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்போர், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் ‘கோத்தாகோகம’ ஆகிய பிரதேசங்களுக்குள் நுழைந்துவிடாத வகையில், பிரதான வீதிகளில் நிரந்தர இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் வெளித்தெரியாதவாறு கூர் ஆணிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த வீதித் தடைகள் காரணமாக பொதுமக்கள் நேற்றுப் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்தனர். அத்துடன் அம்புலன்ஸ்களும் செல்ல முடியாத நிலைமை காணப்பட்டது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் சார்பில் கொழும்பு கோட்டையிலிருந்து காலிமுகத்திடலிலுள்ள ’கோத்தாகோகம’ வரையில் பேரணி முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. நீதிமன்றத்தை அணுகிய பொலிஸார், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள் 16 பேருக்கு தடை உத்தரவு பெற்றிருந்தனர்.
நேற்று முதல் இன்று காலை 9 மணி வரை கோட்டை ஜனாதிபதி மாவத்தை, யோர்க் வீதி, லோட்டஸ் வீதி மற்றும் வங்கி மாவத்தை உள்ளிட்ட இடங்களுக்கு அவர்களுக்கு நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மேற்படி வீதிகளையும் அதனைச் சூழவுள்ள வீதிகளையும் பொலிஸார் நிரந்த இரும்பு வேலிகளை அமைத்து மூடினர். இரும்பு வேலிகளைத் தாண்டி முன்னோக்கி செல்ல முயன்றால் இரும்பிலான கூர் முற்கள் குத்தும் வகையில் அமைத்திருந்தனர். அதனை மூடி மறைத்து கறுப்பு பொலித்தீன் சுற்றப்பட்டிருந்தது.
சில இடங்களில் பொதுமக்கள் பொலிஸாருடன் முரண்பட்டனர். வேறு சில இடங்களில், அமைக்கப்பட்ட கம்பி வேலிகளுக்குள்ளால் பெரும் சிரமத்துக்கும் மத்தியில் நுழைந்து பொதுமக்கள் சென்றனர். சுற்றுலாவிகளுக்கும் இதே நிலைமையே ஏற்பட்டது.
கொழும்பு – லோட்டஸ் வீதியில் ஏற்படுத்தப்பட்ட தடை காரணமாக நோயாளிகளை ஏற்றி வந்த அம்புலன்ஸ் திரும்பிச் செல்லவேண்டி ஏற்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கு பாதுகாப்புக்கடமையிலிருந்த பொலிஸாருடன் மக்கள் கடும் வாக்குவாதப்பட்டனர்.
இந்நிலையில், அம்புலன்ஸ், சுற்றுலாத்துறையினரை ஏற்றிவரும் வாகனங்கள் மற்றும் பொதுச் சேவைகளுக்கு இடமளிக்கும் வகையில், தடுப்பு வேலிகளை அகற்றுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தினார்.
இதேவேளை பொலிஸார் கொழும்பில் ஏற்படுத்திய வீதித் தடைகளுக்கு எதிராக கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
Discussion about this post