ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு தீர்மானித்துள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, அதற்கான ஆவணத்தில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையையும் ஆரம்பித்துள்ளது.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை குறித்து இடம்பெற்ற விவாதத்தின்போதே, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்தார். அதற்கான காரணங்களையும் அவர் தெளிவுபடுத்தினார்.
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஜனாதிபதி முறைமையின்கீழ் இடைக்கால அரசு பற்றியோ அல்லது காபந்து அரசு பற்றியோ கதைப்பதில் எவ்வித பயனும் கிடையாது. தற்போதைய ஜனாதிபதி மக்கள் ஆதரவை இழந்துவிட்டார். அவர்மீது எமக்கு நம்பிக்கை இல்லை.
நாம் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். ஜனநாயக வழியிலேயே மக்கள் போராடுகின்றனர். அதனை குழப்புவதற்கு ஆளுந்தரப்பே முற்படுகின்றது. எனவே, மக்கள் கோரிக்கையை ஏற்று, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும்.” – என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
சஜித் பிரேமதாசவின் உரையின் பின்னர், நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் பணியை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்துவிட்டது.
Discussion about this post