நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தவறிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும், அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் நடத்தப்படும் மக்கள் போராட்டங்கள் நேற்றும் பல இடங்களில் நடைபெற்றன.
மக்கள் போராட்டங்களிலும், பேரணிகளிலும் ஈடுபட்டதால் சில இடங்களில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
நேற்று நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற்ற நிலையில், நாடாளுமன்றத்துக்குச் செல்லும் வீதியில் பொதுமக்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், அரசாங்கத்துக்கும் எதிராகப் பொதுமக்கள் கோஷங்களை எழுப்பியதுடன், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
கொள்ளுப்பிட்டியில் நேற்று இரவிரவாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
பிலியந்தல, ஹாலி எல, கண்டி, கொட்டகலை, புத்தளம், ஏறாவூர், கல்முனை, மட்டக்களப்பு, மருதமுனை ஆகிய இடங்களிலும் நேற்று பொதுமக்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதேவேளை, சுகாதார அமைச்சுக்கு முன்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தது. நெருக்கடிகளுக்குத் தீர்வு வழங்கத் தவறிய அரசாங்கத்தைக் கண்டித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Discussion about this post