இலங்கையில் அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் நேற்று இரவு பதவி விலகல் கடிதத்தைக் கையளித்திருந்த நிலையில், இன்று காலை சில அமைச்சர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிதி அமைச்சராக அலி சப்ரியும், வெளியுறவுத்துறை அமைச்சராக ஜி.எல்.பீரிஸூம், நெடுச்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவும், கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்த்தனவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் எடுத்துள்ளனர்.
அமைச்சர்களின் பதவி விலகல் நடவடிக்கைகள், மக்களை ஏமாற்றும் செயல் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அமைச்சர்கள் நியமனம் நடந்துள்ளது.
தற்போது அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருப்பவர்கள், நேற்றுவரை வேறு அமைச்சுப் பொறுப்புகளை வகித்தவர்களாவர். நாட்டில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
பதவியில் இருந்து விலக மறுக்கும் கோத்தாபய ராஜபக்ச, மக்கள் எதிர்ப்பைச் சமாளிப்பதற்காக இந்த அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்டுள்ளார் என்று கூறப்படுகின்றது. தற்போது மேற்கொள்ளப்படும் அமைச்சரவை மாற்றம் பயனற்ற செயல் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
அதேவேளை, மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 50 பேர் சுயாதீனமாக இங்குவர் என்று பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான நிமால் லாங்சா அறிவித்துள்ளார். அவ்வாறு நடைபெற்றால் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும்.
அத்துடன் அரசாங்கத்தின் பங்களாளிக் கட்சி ஒன்றின் தலைவரான வாசுதேவ நாணயக்கார தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் இனிமேல் நாடாளுமன்றத்தில் சுயாதீனமான இயங்குவர் என்று அறிவித்துள்ளார்.
Discussion about this post