இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நடந்த சந்திப்பில் பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
இந்தச் சந்திப்புத் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி செயலகம், நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார் என்று கூறியுள்ளது.
சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பல கோரிக்கைகளுக்கு, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, சாதகமாகப் பதிலளித்தார் என்று கூறினார்.
அரசியல் கைதிகளை விடுவித்தல் விரைவுபடுத்தப்படும் என்று கூறிய கூட்டமைப்பின் பேச்சாளர், வடக்கு – கிழக்கில் காணிகளைக் கையகப்படுத்தல், எல்லைகள் மாற்றப்படுதல் போன்றன இனி நடக்காது என்று ஜனாதிபதி உறுதியளித்தார் என்றும் கூறினார்.
அரசியல் கைதிகள் வழக்கு விடயங்களை ஆராய்வதற்கு நீதியமைச்சர் அலி சப்ரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
புதிய அரசமைப்பை உருவாக்குவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இரு மாதங்களில் கிடைக்கும் என்றும், அதன்பின்னர் அதிகாரப் பகிர்வு தொடர்பாகப் பேசுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு – கிழக்கு பொருளாதார மீட்சிக்காக விசேட அபிவிருத்தி நிதியம் ஒன்றை உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டது. அதைக் கூட்டமைப்புடன் சேர்ந்த அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும், புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post