தங்களின் வாழ்வாரத்தை காப்பாற்றிக் கொள்ள தமிழகம் வரும் இலங்கைத் தமிழர்களிடம், பணம் வசூலிப்பதை தமிழகப் படகு உரிமையாளர்கள் கைவிடுவதோடு, அவர்களுக்கு அரணாக நிற்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி விழிபிதுங்கி நிற்கிறது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு 284 ரூபாவாக ஆக வீழ்ச்சியடைந்திருக்கிறது. அங்கு அத்தியாவசியப் பொருள்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான உணவு தட்டுப்பாடு, வேலையின்மை காரணமாக யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் தமிழகத்துக்கு வந்துள்ளனர்.
அடுத்து வரும் நாள்களில் மேலும், அதிக எண்ணிக்கையில் தமிழகத்துக்கு பலர் அகதிகளாக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தமிழகத்துக்கு அகதிகளாக வரும் இலங்கைத் தமிழர்களுக்கு போதுமான வசதிகளை ஏற்படுத்தி தர தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது என்றுள்ளது.
Discussion about this post