இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில், நேற்றைய தினமும் விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளமையானது இலங்கைவாழ் மக்கள் கடும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை நேற்று முன்தினம் சுமார் 600 ரூபாவரை அதிகரித்த நிலையில் , நேற்று தேசிய பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பெல்வத்த பால் மா நிறுவனம் 400 கிராம் பால் மா பக்கெட்டொன்றின் விலையை 105 ரூபாவால் அதிகரித்துள்ளது.
இவ்வாறு பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், தேநீர் கோப்பையொன்றின் விலையை 100 ரூபாவாக நிர்ணயிப்பதற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதேவேளை, சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு தொலைபேசி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
தொலைபேசி நிறுவனங்கள் இது தொடர்பில் அமைச்சிற்கு அறிவித்துள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், ரூபாவின் பெறுமதி 30 வீதத்தினால் வீழ்ச்சியடைந்த நிலையில் சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எனினும், உள்நாட்டு அழைப்புகளுக்கான கட்டணங்கள் அல்லது இணையத்தள பாவனைக்கான கட்டணங்களை உயர்த்துவதற்கு இதுவரை எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதேபோல 12.5 கிலோ கிராம் நிறையுடை லாஃப்ஸ் (Laugfs) எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிப்பதற்கு லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, 12.5 கிலோ கிராம் நிறையுடை லாஃப்ஸ் (Laugfs) எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 4,199 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தையில் முகக்கவசங்களுக்கான விலை இன்று முதல் 30 சதவீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Discussion about this post