ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு பிணை வழங்கியுள்ளது சென்னை உச்ச நீதிமன்றம்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் தற்போது தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.
பேரறிவாளன் 32 ஆண்டுகளாக இந்த வழக்கில் சிறையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவை அடங்கிய அமர்வு, அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது. பேரறிவாளனின் 32 ஆண்டுகால சிறைவாசத்தில் அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்குவது இதுவே முதல் முறையாம்.
“மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்தாலும், மனுதாரர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதைக் கருத்திற் கொண்டு அவருக்கு பிணை வழங்குகிறோம்” என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
விசாரணை நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவர் பிணையில் விடுவிக்கப்படுவார் என்றும் ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்திலும் அவர் ஜோலார்பேட்டை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் தற்போது தண்டனை அனுபவித்துவரும் 7 பேரில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தூக்கு தண்டனை 2014ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது பேரறிவாளனுக்கு மூன்று முறை சிறை விடுப்பு அளிக்கப்பட்டிருந்தும் அவர் எவ்விதத் தவறுகளும் செய்யவில்லை என்பதைச் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.
தண்டனைக் காலத்தில் அவருடைய நடத்தை சிறப்பாக இருந்ததையும் அவர் தனது கல்வித் தகுதியை வளர்த்துக் கொண்டது குறித்தும் சிறையில் உள்ள நூலகத்தில் உதவிசெய்தமை தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
அனைத்தையும் ஆராய்ந்த நீதிபதிகள் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டனர்.
Discussion about this post