அரசமைப்பின் புதிய திருத்தத்துக்கான முன்மொழிவுகளைக் கொண்ட வரைவை 21 ஆவது திருத்தச் சட்ட வரைபாக ஐக்கிய மக்கள் சக்தி, சபாநாயகரிடம் நேற்றுக் கையளித்தது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இந்த முன்மொழிவு வரைபை கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் நேற்றுக் காலை கையளித்தார்.
அதன்பின்னர் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையிலான குழுவினர் 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை சபாநாயகரிடம் கையளித்தனர்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலை தொடர்பான முத்தரப்பு அதிகாரப் பகிர்வுக்கான திருத்தம், 20ஆவது திருத்தத்தை ஒழித்தல், சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவதல், தேசிய பாதுகாப்புக் கவுன்சில் அமைத்தல் போன்ற பல ஜனநாயகப் பண்புகளை இந்த வரைவு கொண்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை வலுப்படுத்தும் சட்ட வரைபு ஒன்றை சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளனர். நேற்று நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகரிடம் இது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இந்தச் சட்டவரைபு ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ச தலைமையில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post