ஏழாலைப் பகுதியில் வீடு புகுந்து நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் நடந்துள்ளது. வீட்டுக்குள் புகுந்த இருவர், வீட்டில் இருந்தவர்களை தாக்கி – அச்சுறுத்தி மூன்றரைப் பவுண் நகைகளைக் கொள்ளையடித்திருந்தனர்.
கொள்ளையர்களின் தாக்குதலில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாடுக்கு அமைய யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் முதன்மைப் பொலிஸ் பரிசோதகர் நிஹால் பிரான்ஸிஸ் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் குப்பிளானைச் சேர்ந்த 23 மற்றும் 33 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, கொள்ளையிடப்பட்ட நகைகள் சுன்னாகத்தில் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post