இந்தியாவில்(india) உங்கள் இயக்கத்தை ஏன் சட்டவிரோத அமைப்பாக தடை செய்யக் கூடாது என விளக்கம் அளிக்க வேண்டும் என விடுதலை புலிகள் அமைப்புக்கு இந்திய மத்திய அரசு அறிவித்தல் அனுப்பி உள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மத்திய அரசின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் இந்த அறிவித்தலை அனுப்பியுள்ளது.
விடுதலை புலிகள் அமைப்பின் மீதான தடை
கடந்த மே மாதம் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீடித்தது.
விடுதலை புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயற்பாடுகள், இன்னும் இந்தியாவின் இறைமையைப் பாதிக்கும் வகையிலேயே அமைந்திருப்பதாக, இந்திய மத்திய அரசாங்கத்தின் சார்பில் மேற்குறிப்பிட்ட தீர்ப்பாயத்தில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே விடுதலை புலிகள் இயக்கத்தைச் சட்டவிரோத அமைப்பு அல்லவென்று அறிவிக்குமாறு இந்த தீர்ப்பாயத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அவ்வாறு அறிவிக்க வேண்டியதற்கான காரணங்களை விடுதலை புலிகளிடமே இந்தத் தீர்ப்பாயம் கோரியுள்ளது.
விடுதலை புலிகளுக்கு 30 நாட்கள் அவகாசம்
இதற்காக விடுதலை புலிகளுக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தீர்ப்பாயத்தின் அடுத்த அமர்வு ஜூலை மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், விடுதலை புலிகள் இயக்கம், சட்டத்தரணி ஊடாக தமது விளக்கத்தையோ அல்லது ஆட்சேபனையையோ பதிவு செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post