யாழ்ப்பாணம், பருத்தித்துறை வீதியில் அச்சுவேலி – வல்லைப் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மதியம் இறைச்சி வியாபாரி ஒருவரிடம் இருந்து 3 லட்சம் ரூபா பணத்தை கத்தி முனையில் வழிப்பறி செய்ய முயன்றபோது, இவர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
புத்தூர் பகுதியில் வியாபாரம் செய்யும் இறைச்சி வியாபாரி வல்லைப் பகுதியூடாக வீட்டுக்குச் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் கத்தி முனையில் அச்சுறுத்திப் பணத்தைப் பறிக்க முயன்றுள்ளனர். சாதுரியமாகச் செயற்பட்ட வியாபரி அவர்களில் ஒருவரை மடக்கிப் பிடித்துள்ளார். அந்த வீதியால் வந்தவர்களும் பிடிபட்ட இளைஞரை முறையாகக் கவனித்தனர்.
தப்பிச் சென்ற மற்றைய இளைஞன் நாவல்காட்டுப் பகுதியில் உள்ள கோயில் கேணி ஒன்றில் கால் கழுவிக் கொண்டிருந்த போது இளைஞர்களால் பிடிக்கப்பட்டான். குறித்த இருவரும் வழிப்பறி செய்த பணம் உடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது.
அவர்கள் இருவரையும் முறையாகக் கவனித்த பொதுமக்கள் அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம், புறநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post