வல்வெட்டித்துறை, ஊரிக்காடு பகுதியில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்றவர்கள், அந்த மோட்டார் சைக்கிளில் சென்று சங்கிலி அறுப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் நேற்று தனது வீட்டின் முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் இனந்தெரியாதவர்களால் திருடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் நேற்றுமாலை அந்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பருத்தித்துறை, திக்கம் பகுதியில் வீதியில் சென்ற பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.
வேறு சில இடங்களிலுமு் அவர்கள் சங்கிலி அறுப்பில் ஈடுபட முயன்றபோதும், மக்கள் சுதாகரித்துக் கொண்டதால் அவர்களின் முயற்சி பயனிக்கவில்லை.
மோட்டார் சைக்கிள் திருடப்பட்டமை தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சங்கிலி அறுப்புச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, நேற்றுக்காலை தனது வீட்டுக்கு முன்பாகக் கணவனுக்கு உணவு கொடுக்கக் காத்திருந்த பெண் ஒருவரின் இரண்டே முக்கால் பவுண் சங்கிலி மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகவும் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post